சனி, 30 ஜூலை, 2011

அழைப்பு



ஒவ்வொருமுறையும் வீட்டைப்பூட்டி வெளியே

வருகையில்தான் உள்ளிருந்து அழைக்கிறது

தொலைபேசி

தமிழ் சினிமா ஃபார்முலா


தமிழ் சினிமா ஃபார்முலா 
(எல்லாப் படங்களுக்குமானது அல்ல)
---------------------------------------------------------------
இந்தக் கவிதை(யா?)க்காக தமிழ்த்தாய் என்னை மன்னிக்க!
தூயத்தமிழில் முயன்றால் தலை கிறுகிறுக்குது,முடியல...

--------------------------------------------------------------
புதுமையானத் திரைக்கதையில் புதுப்பட தயாரிப்பு,
தினசரியில் விளம்பரம், நடித்தவர்கள் பேட்டி.
பண்டிகை நாளில் வெளியீடு.
கட்அவுட்டில் ஹீரோவுக்கு அபிஷேகம்,மலர்மாலை,
முதல்காட்சிக்கு இனிப்பு வினியோகம்.
---------------------------------------------------------------
கதைக்குள் நுழைவோம்...
விதவைத்தாயாய் முன்னாள் ஹீரோயின்.
நெற்றியில் விபூதி,கண்களில் கண்ணீர்
குடிசையில் வாசம், போட்டோவில் அப்பா.
ரீபோக் ஷூவும், ரேபேன் கண்ணாடியுமாக
கூலிவேலைச் செய்யும் மகனாக ஹீரோ.
அறிமுகப்பாட்டால் அதிரும் அரங்கு, சிதறும் நாற்காலிகள்.
வயதுக்கு மீறிய பேச்சுடன் ஃபுல் மேக்கப்பில்
பூ வியாபாரம் செய்யும் தங்கையாக வளர்ந்து வரும் நடிகை.
கல்லூரியில் படிக்கும் வில்லனின் மகள்.
வட நாட்டு இறக்குமதி,தகுதி-தமிழ் தெரியாது.
கதைப்படி குறும்புக்காரி, சுற்றிலும் தோழியர், ஊர்சுற்றல்,
ஹீரோவுடன் சந்திப்பு, முதல் சந்திப்பில் மோதல்.
வம்பு செய்யும் ரவுடியிடமிருந்து காப்பாற்றியபின் காதல்.
உள்நாட்டு லொக்கேசனில் மரத்தைச் சுற்றி பாடல்.
மகளின் காதலைத் தடுக்க வில்லனின் ஏற்பாடுகள்,
சண்டைக் காட்சியில் ஹீரோவின் டூப்பின் சாகசங்கள்.
கிளைக்கதையாய் தங்கையின் காதல்,கவர்ச்சிக் காட்சிகள்,
கர்ப்பம்,காதலன் ஏமாற்று,தற்கொலை முயற்சி.
ஹீரோ காப்பாற்றி அப்பா போட்டோ முன் சபதம்.

------------இடைவேளை----------------------------------------------

தங்கையின் பிரச்சனையால் காதலர்கள் தற்காலப்பிரிவு,
சோகம், டாஸ்மாக்கில் தண்ணியடி, தத்துவப்பாட்டு.
காதலன் நிலைகண்டு காதலி வருத்தம்,தோழியர் ஆறுதல்.
தங்கையின் காதலனைத் திருத்தி, ஊர் மெச்சத் திருமணம்.
திருமணத்தில் குத்துப்பாட்டு,பாட்டின் முடிவில்
ஹீரோ-ஹீரோயின் மீண்டும் சந்திப்பு.
வில்லனுக்குத் தெரியவர காதலியின் திருமண ஏற்பாடுகள்,
மாப்பிள்ளை வில்லனின் நண்பரின் மகன், காதலி மறுப்பு,
அதனால் வீட்டுக்குள் சிறைவைப்பு,
ஹீரோ முயற்சியில் காதலி தப்பித்தல்,
ஊர்ப்பெரியவரான கௌவரவ நடிகர் அடைக்கலம் தருதல்,
ஹீரோவுடன் ரகசிய திருமண ஏற்பாடுகள்,
டைரக்டர் போகவிரும்பிய வெளிநாட்டில் பாடல்.
கிளைமாக்ஸில் ஹெலிகாப்டரில் மாப்பிள்ளை வில்லன்.
ஹீரோவின் தாய் கடத்தல்,தடுத்த தங்கை தாக்கப்படுதல்,
மகளை அனுப்பும்படி மிரட்ட பழைய பாக்டரியில் தாய் அடைப்பு,
காவலுக்கு மாமிச மலைகளாய் ஸ்டண்ட் நடிகர்கள்,
சுவரை உடைத்து ஹீரோ வருகை,சண்டை, ரத்தம்.
தாய் செண்டிமெண்ட் வசனம், வில்லன் திருந்துதல்,
ஹீரோ காதலியைக் கரம்பிடித்தல்,பின்னணியில் லல்லல்லா
குரூப் போட்டோவில்,டைரக்டர், தயாரிப்பாளருடன் சுபம்.
------------------------------------------------------------------
உலகத் தொலைக்காட்சி வரலாற்றில்,
வெளிவந்த இரண்டே நாட்களில்,
புத்தாண்டு ஸ்பெஷலாக
சின்னத்திரையில் ஒளிபரப்பு,ஸ்பான்ஸர்கள்,விளம்பரங்கள்.
------------------------------------------------------------------
மீண்டும் புதுமையானத் திரைக்கதையில் புதுப்பட தயாரிப்பு,
தினசரியில் விளம்பரம், நடித்தவர்கள் பேட்டி.
வாழ்க தமிழ் சினிமா!
நன்றி!
__________________________________________________________

சனி, 23 ஜூலை, 2011

டிஸ்சார்ஜ்

லதா அந்த மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மாணவ செவிலியாக பணியாற்றப் போவதை மகிழ்ச்ச்சியாகக் கருதினாள். அவள் படிக்கும் நர்ஸிங் ஸ்கூலில் இருந்து இதற்கு வழிவகை செய்திருந்தார்கள். மொத்தம் மூன்று மருத்துவமனைகளுக்கு சுழற்சி முறையில் பிரித்து அனுப்புவார்கள். முதலாவதாகவே நகரின் பிரபல மருத்துவமனைக்குப் போகும் வாய்ப்பு வந்தது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

முதல் நாள் அவளுக்குப் பணி எதுவும் ஒதுக்கப் படவில்லை. சீனியர் நர்ஸ் இருக்கும் அறையில் இருக்கச் சொன்னார்கள். சீனியர் சிஸ்டர் வந்தார். ஒரு புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது அந்த மருத்துவமனையின் சட்டத்திட்டங்கள் அடங்கிய புத்தகம். ‘இந்தப் புத்தகத்தின்படிதான் நடக்க வேண்டும். இதை நன்கு படித்து நினைவில் கொள்ள வேண்டும். இந்த மருத்துவமனையில் நகரின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம் வருவார்கள் எந்த விதத்திலும் தவறு நடந்து விடக்கூடாது. வேண்டுமானால் இதை எடுத்துச் சென்று படித்துவிட்டு நாளை கொண்டு வா. நாளை உனக்கு ஜெனரல் டூட்டி. பொதுவாக மாணவ நர்ஸ்களுக்கு ஜெனரல் டூட்டிதான் போடுவார்கள். காலை 9 மணிக்கு முன்பாக நீ இங்கு இருக்க வேண்டும். இன்று நீ இரண்டாவது மாடியில் உள்ள நூலகத்தில் சென்று செவிலியர் படிப்பு சம்பந்தமான புத்தகங்களைப் படித்துக் கொண்டிரு’ என்று சீனியர் சிஸ்டர் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.


அடுத்தநாள் நாலாவது மாடியில் உள்ள வார்டில் டியூட்டி. ஏற்கனவே நான்கு பேர் இருந்தார்கள் அவர்களோடு சேர்ந்து லதா ஐந்தாவது. மொத்தம் இருபது அறைகள் இவர்கள் பொறுப்பில் வரும். இருபது அறையில் இருக்கும் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது. டாக்டர்கள் வரும்போது உடன் கேஸ்ஃபைலையும், உபகரணங்களையும் அதற்குரிய வண்டியில் வைத்து உருட்டிச்செல்வது, அவசர உதவி தேவைப்படும் நேரத்தில் ஓடிச்சென்று உதவுவது இவைதான் வார்டில் செய்யவேண்டிய பணிகள். இதோடு தினமும் படுக்கையில் உள்ள விரிப்புத் துணிகளை மாற்றுவது, நோயாளிகளின் உடம்பைத் துடைத்து அவர்களின் உடைகளை மாற்றுவது போன்ற பணிகளும் செய்யவேண்டும். 


தினமும் காலை 9:30க்கு டாக்டர் வார்டுக்கு வருவார். அவர் நோயாளிகளைப் பார்க்கச் செல்லும்போது அவருடன் மூன்று நர்ஸ்கள் செல்ல வேண்டும். ஒருவர் தொலைபேசி ஏதும் வந்தால் அதை அட்டெண்ட் செய்யும் பொருட்டு அறையில் இருப்பார். ரவுண்ட்ஸ் செல்லும் நர்ஸ்கள் டாக்டர் சொல்லும் குறிப்புகளை எழுதிக்கொள்ள வேண்டும். நோயாளிகளின் கேஸ் ஃபைலை முன்பாகவே படித்து வைத்து டாக்டர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். டாக்டர் வரும்போது அந்த வார்டு பரபரப்பாக இருக்கும். 

அன்றும் 9:30க்கு டாக்டர் வந்தார். மூன்று ஸ்டாஃப் நர்ஸுகளுடன் லதாவும் ரவுண்ட்ஸ்க்கு போனாள். ஒவ்வொரு அறையாக நோயாளிகளைப் பார்த்துக்கொண்டே டாக்டர் வந்தார். டாக்டர் வயதில் இளையவர். நோயாளிகளிடம் சிரித்துக்கொண்டே அவர்களுக்கு ஆறுதலாகப் பேசினார். பதினாலாம் எண் அறை வந்ததும் அது பூட்டிக்கிடந்தது. கேஸ்ஃபைலை பார்த்து இந்த நோயாளி இன்று வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கலாம் என்று சீனியர் டாக்டர் குறிப்பு எழுதியிருக்கிறார் என்று ஒரு நர்ஸ் சொன்னாள்.ஒரே ஒரு ஊசி மருந்து மட்டும் பாக்கி இருந்தது, அதுவும் இன்று காலைப் போட்டாகிவிட்டது என்றாள். டாக்டர் கடைசியில் இந்த நோயாளியைப் பார்க்கிறேன் என்று மற்ற நோயாளிகளைப் பார்க்கச் சென்றார். 


லதா அந்தக் கேஸ்கட்டைப் பார்த்தாள். நோயாளியின் பெயர் நாதம் என்று எழுதியிருந்தது. டாக்டர் ரவுண்ட்ஸின் இருபதாம் நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, முதல் அறையில் உள்ள நோயாளி அவசரத் தேவைக்காக அழைக்க ’டிரிப்ஸ் மாற்றுவதற்காக இருக்கும், அறையில் இருக்கும் ஸ்டாஃப் நர்ஸை அழைத்துக் கொண்டு போய்ப் பார்’ என்று லதாவைப் போய் பார்க்கச் சொன்னார்கள். 

லதா நர்ஸ் அறையில் இருந்த மற்ற நர்ஸையும் அழைத்துக்கொண்டு முதல் அறைக்கு வந்து தீரும் தரும்வாயில் இருந்த டிரிப்ஸை மாற்றினாள். அறையில் இருந்தவன் ஒரு சிறுவன். அவன் சிரித்தபடியே பேசிக்கொண்டிருந்தான். ’அக்கா, இதோடு டிரிப்ஸ் முடியுமா?’ என்றாள். ’ஆமாம்’ என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு வெளியே வரும்போது டாக்டர் போய்விட்டிருந்தார். 


மீண்டும் அறைக்கு வந்த லதா நோயாளியின் கேஸ் புத்தகங்களைப் பார்த்தாள். பதினான்காம் அறை நோயாளியை வீட்டுக்கு அனுப்பலாம் என்று ரவுண்ட்ஸ் போன டாக்டரும் எழுதி ஒப்பிட்டிருந்தார். ’லதா, பதினான்காம் அறை எண் நோயாளி பணம் கட்டிய ரசீதைத் காட்டிவுடன் இந்த டிஸ்சார்ஜ் கார்டைக் கொடுக்க வேண்டும். நோயாளியை சக்கர நாற்காலியில் அமரவைத்து உருட்டிச்சென்று லிஃப்டில் தரைத்தளம் செல்ல வேண்டும். பிறகு அங்குள்ள அட்டெண்டர் பார்த்துக்கொள்வார். எக்காரணம் கொண்டும் நடத்திக் கூட்டிச் சென்று விடாதே’ என்று ஒரு ஸ்டாஃப் நர்ஸ் சொன்னாள்.


லதா பதினான்காம் எண் அறைக்கு சென்றாள். ஏற்கனவே உடை மாற்றி ஒரு பெரியவர் இருந்தார். படுக்கையின் அருகே ஒரு பையும் தயாராக இருந்தது.


 ’புறப்பட ரெடியா ஐயா?’ என்று சிரித்தபடியே கேட்டாள். 


’ஆமாம் ரெடி’ என்று சிரித்தபடியே சொன்னார். 


லதா திரும்ப வந்து சக்கர நாற்காலியை உருட்டி வந்தாள். 


‘பெரியவரே இந்த நாற்காலியில் அமருங்கள் உங்களை தரைத்தளம் வரை உருட்டிச்செல்கிறேன்’


’எனக்கெதற்கு நான் கல்லு போல இருக்கிறேன்.’


‘மன்னிக்க வேண்டும் ஐயா, மருத்துவமனை சட்டப்படி நான் உங்களை நடத்தி கூட்டிச் செல்ல முடியாது. தயவு செய்து சக்கர நாற்காலியில் வாருங்கள். இதில் எனக்கு எந்த ஒரு சிரமும் இல்லை.’பெரியவரை வற்புறுத்தி சக்கர நாற்காலியில் அழைத்துகொண்டு லிஃப்டில் கீழே இறங்கி வந்தாள். 


அட்டெண்டரைக் காணவில்லை. மர்த்துவமனை சட்டப்படி நோயாளியைத் தனியாக விடக்கூடாது. பெரியவருடன் பேச்சுக் கொடுத்தாள்.


‘ஐயா, உங்களுடன் உங்கள் மனைவி வரவில்லையா?’


‘என்ன இப்படி கேட்கிறாய், அவள் உள்ளே உள்ள குளியல் அறையில் மருத்துவமனை ஆடைகளை உடைமாற்றிக் கொண்டிருக்கிறாள்’


’அப்படியென்றால் அவர்கள் பெயர்..?’


‘நாதம்’






ஒரு கடிதம்


ஒரு கடிதம்


பாங்க், இன்ஸூரன்ஸ், டாக்ஸ் போன்ற வேலைகளை செய்ய சனிக்கிழமை தான் எனக்கு தோதுப்படும். சனிக்கிழமை எனக்கு அலுவலகம் கிடையாது. மற்ற நாட்களில் இரவு வரை வேலையிருக்கும். எனவே பெரும்பாலும் சனிக்கிழமைகளில் இந்த வேலைகளை முடித்து விடுவேன். 

ஒரு பணபரிமாற்றம் சம்பந்தமாக வங்கிக்கு ஒரு கடிதம் கொடுக்க வேண்டி வந்தது. இன்று சனிக்கிழமை எப்படியும் அதை முடித்து விட வேண்டும். கம்ப்யூட்டரில் டைப் செய்து கடிதத்தை முடித்து விட்டேன். பிரிண்ட் கொடுத்தால் பிரிண்டர் மக்கர் செய்தது. கம்ப்யூட்டரில் எனக்கு தெரிந்த ஒரே ரிப்பேர் வேலை கார்டைக் கழற்றி மாட்டுவது. வழக்கம் போல கார்டை கழற்றி மாட்டினேன். ஒன்றும் வேலைக்கு உதவவில்லை. பிரிண்டர் சாஃப்ட்வேரை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு, மீண்டும் சாஃப்டுவேரை இன்ஸ்டால் செய்து பார்த்தேன். ஆனாலும் தேறவில்லை. சரி பென் டிரைவில் காப்பி செய்து எடுத்து ஆஃலிஸில் பிரிண்ட் செய்து கொள்ளலாம் என்று பென் டிரைவில் காப்பி செய்து கொண்டேன். அடுத்த வாரம் கடிதத்தைக் கொடுத்துக் கொள்ளலாம் என்று ஆஃபிஸ் கொண்டு போகும் பேக்கில் பென் டிரைவை போட்டு வைத்தேன்.அலுவலக வேலையில் பிரிண்ட் எடுக்கும் விஷயம் மறந்தே விட்டது. பேக்கில் இருந்த பென் டிரைவை எடுக்கவே இல்லை. அடுத்த சனிக்கிழமைதான் வங்கிக்கு கடிதம் கொடுக்க வேண்டிய ஞாபகம் வந்தது. பிரிண்டர் சரியாகியிருக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் ஒரு முயற்சி செய்து பார்த்தேன். கண் சிமிட்டிக்கூட பார்க்கவில்லை. சரி அலுவலக முகவரிக்கு இ-மெயிலில் கடிதத்தை அனுப்பி வைப்போம். அலுவலகத்தில் பார்த்தால் ஞாபகம் வரும்.பிரிண்ட செய்து கொள்ளலாம். என்ன இன்னும் ஒரு வாரத்துக்கு கடிதம் கொடுக்கும் வேலையை ஒத்திப் போடவேண்டும்.

அலுவலகத்தில் வருட முடிவுக்கு முன் நடத்த வேண்டிய கூட்டங்கள், மினிட்ஸ் சரிபார்ப்பு, ரிப்போர்ட் வர்க் என்று இந்த வாரமும் டைட் வர்க். எனக்கு ஒரு பழக்கம் நல்லதா கெட்டதா எனத் தெரியவில்லை, ஆஃபிஸுக்கு போய் விட்டால் பெர்ஸனல் வர்க் எல்லாமே மறந்து விடும். அதாவது சுருக்கமாக இந்த வாரமும் பிரிண்ட் எடுக்கவில்லை.

இன்று சனிக்கிழமை, இன்னும் ஒத்திப் போட முடியாது. பாங்கிலிருந்து வீட்டுக்கு ஃபோன் செய்து விட்டார்கள். ஃபோன் அட்டெண்ட் செய்தது என் மனைவி. இனி பாங்க் மானேஜர் சும்மா இருந்தாலும் இவள் இருக்க விட மாட்டாள். என்ன ஆச்சு பாங்க் மாட்டர் என்று நிமிஷத்துக்கொருமுறை கேட்பாள். கடைசியில் ஒரு வழியாக பாங்க் வேலையை முடித்து விட்டேன். எப்படி என்கிறீர்களா? வேறு ஒன்றுமில்லை, வெள்ளைக் காகித்தில் பேனாவால் கடிதத்தை எழுதி நேரில் சென்று கொடுத்து விட்டு வந்து விட்டேன்.

வியாழன், 21 ஜூலை, 2011

அவன் தானா இவன்?

எழும்பூரில் புறப்படத் தயாராக இருந்தது அனந்தபுரி எக்ஸ்பிரஸ். நான் ராகவன். வயது நாற்பத்தி ஐந்து. தனியார் அலுவலகத்தில் வேலை. நாகர்கோயிலில் என்னுடைய நெருங்கிய உறவினருக்கு திருமணம். அதில் கலந்து கொள்ளப் போய்க் கொண்டிருக்கிறேன். கடைசி நேரத்தில் தான் எனக்கு டிக்கெட் கன்ஃபார்ம் ஆனது. அரக்கப் பரக்க ஓடி வந்து இப்போது எஸ்-8 கோச்சில் அமர்ந்து இருக்கிறேன். எனக்கு அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டிருந்தது. சௌகரியக் குறைவாக இருந்தாலும் பொதுவாக அப்பர் பெர்த் எனக்குப் பிடித்தமான ஒன்று. மூன்று பெர்த் உள்ள கோச்சுகளில், ஏறி படுக்கும் அளவுக்கு உடல் வலு இடம் கொடுக்கும் வரை, அப்பர் பெர்த்தில் படுத்தபடி பயணம் செய்வது பரம சுகம். காலையில் பாதி உறக்கத்தில் இருக்கும் போது யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். 
நான் நல்ல கலகலப்பாகப் பழகக் கூடியவன் தான். கழிந்த சில வருடங்களாக நான் அப்படி இல்லை. எனக்கு வாழ்க்கையில் நடந்த ஒரு சோக நிகழ்ச்சிக்குப் பிறகு நான் இப்படி மாறி விட்டேன். கொண்டு வந்த சிறிய பையையும் அப்பர் பெர்த்தில் போட்டுவிட்டு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன். எதிரே உள்ள இருக்கையில் வயதான கணவன், மனைவி இருந்தார்கள். உடன் இருப்பது மகன் போலத் தெரியவில்லை, உறவினராக இருக்கலாம். சைடில் இருக்கும் இரண்டு பேரும் கணவன், மனைவிதான். நடுத்தர வயது இருக்கும். என்னிருக்கையின் அருகில் ஒரு முப்பந்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்மணி இருந்தார். வந்ததிலிருந்து செல்போனை கீழே வைக்கவில்லை. ஒன்று அவருக்கு அழைப்பு வரும் அல்லது அவர் யாரையாவது அழைத்துக் கொண்டிருந்தார். மலையாளமும் தமிழுமாக மாறி மாறி பேசிக் கொண்டிருந்தார். இன்னொருவரின் இடம் காலியாக இருந்தது. ஒருவேளை தாம்பரத்தில் ஏறுவாரோ என்னமோ.

ரயில் புறப்பட சிக்னல் கொடுத்து விட்டார்கள். வண்டியும் நகரத் தொடங்கியது. 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் வியர்க்க விறுவிறுக்க வந்து அருகில் வந்து அமர்ந்தான். ஓடி வந்திருக்க வேண்டும். நல்ல உயரம். பொது நிறம். பார்த்து சிரித்தான். நானும் சிரித்து வைத்தேன்.


நான் கேட்காமலேயே ‘டிராஃபிக் ஜாம்’ என்றான்.

‘அங்கிள் திருவனந்தபுரமா?’ வார்த்தையில் மலையாள வாசம் வீசியது.

‘இல்லை. நாகர்கோயில். நீ….நீங்க என்ன திருவனந்தபுரமா?’

‘அதே. நீங்க என்னை நீன்னே கூப்பிடலாம் அங்கிள். என் பெயர் கோபாலகிருஷ்ணன்’

எனக்கு ஏனோ அவனுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது. அவனுடைய ஒவ்வொரு அசைவும் ஐந்து வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்த என்னுடைய மகனின் ஞாபகம் வந்தது. அவன் சிரிப்பது, அடிக்கடி முடியைக் கோதுவது, கண்களை சுருக்குவது எல்லாமே என் மகன் செய்வது போலவே இருந்தது எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. என் மகன் இறக்கும் போது அவனுக்கு வயது பதினைந்து. இப்போது இருந்திருந்தால் இவன் வயது இருக்கும்.அவன் பெயரும் கோபால்தான். என்ன ஒரு பெயர் பொருத்தம். வளர்ந்து பைலட் ஆகவேண்டும் என்பது என் மகனுக்கு விருப்பமாக இருந்தது. ஆனால் ஒரு சாலை விபத்து எல்லாத்தையும் முடித்து வைத்து விட்டது.

‘திருவனந்தபுரத்தில் யார் இருக்கிறார்கள் கோபால்?’

‘எனக்கு சொந்த ஊர் திருவனந்தபுரம்தான். நான் இங்கு ஏரோனாட்டிகல் இஞ்சினியரிங் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறேன்.’

‘நன்றாக தமிழ் பேசுகிறாயே.’

‘திருவனந்தபுரத்தில் பலரும் தமிழ்ப்படங்கள் பார்ப்பார்கள், தமிழ் பேசுவார்கள். என்னுடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர்களும் தமிழ் ஆட்கள்தான். அதனால் தமிழ் ஆரம்பத்திலேயே கொஞ்சம் தெரியும். இப்போது மூன்று வருடங்கள் தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழ் ஓரளவு பேசுவேன்.’

‘எனக்கு நாகர்கோயில்தான் சொந்த ஊர், சிறு வயதிலேயே சென்னையில் செட்டில் ஆகிவிட்டேன். நாகர்கோயில் ஆட்களுக்கு மலையாளம் ஓரளவு பேசத் தெரியும்.’

‘நைட் சாப்பிட என்ன வைத்திருக்கிறீர்கள் நான் பிரட் வைத்திருக்கிறேன் உங்களுக்கு வேண்டுமா? அங்கிள்’

‘இல்லை வேண்டாம். நான் சப்பாத்தி வைத்திருக்கிறேன். எனது மனைவி வெளியே எதுவும் சாப்பிட அனுமதிப்பது இல்லை.’

சாப்பிட்டு முடித்துவிட்டு உறங்குவதற்கு தயாரானோம். பெண்மணி இன்னும் பேசி முடித்தப் பாடில்லை. நான் குட்நைட் சொல்லிவிட்டு அப்பர் பெர்த்தில் ஏறி படுத்து விட்டேன். அந்த இளைஞனுக்கு மிடில் பெர்த். அந்த பெண்மணி எழுந்தால் தான் மிடில் பெர்த் படுக்கையைத் தயார் செய்ய முடியும். லைட்டை அணைக்கலாமா என்று எதிர் பெர்த் வயதானவர் கேட்ட பிறகு ஒரு வழியாக அந்தப் பெண்மணியும் செல்லில் பேசி முடித்து, படுக்கத் தயாரானாள்.

தூக்கத்தில் எனக்கு என் மகன் நினைப்பாகவே இருந்தது. அவன் பேசியது, ஓடியது, மிதி வண்டி ஓட்டியது எல்லாம். என் கண் முன்பாக வந்து வந்து சென்றது. கனவில் இரயிலில் வந்த இளைஞன் ’அப்பா’ அழைக்கும் போது முழிப்பு வந்ததது. திருநெல்வேலியில் ரயில் நின்று கொண்டிருந்தது. மெதுவாக இறங்கினேன். அந்த இளைஞனைக் காணவில்லை. அந்த பெண்மணி காலையிலேயே எழுந்திருந்து செல்பேசத் தொடங்கி விட்டாள். நான் போய் முகங்கழுவி பல் தேய்த்துக் கொண்டிருக்கும் போது ரயில் நகரத் தொடங்கியது. முகத்தைத் துடைத்து விட்டு இருக்கைக்கு வந்தேன். கையில் காபியோடு அவன் சிரித்துக் கொண்டே அவன் நின்று கொண்டிருந்தான்.

‘அங்கிள் இந்தாருங்கள் காபி’

‘உனக்கு’

‘நான் சாப்பிட்டு விட்டேன்’

இன்னும் 40 நிமிடத்தில் நாகர்கோயில் வந்துவிடும். மேலிருந்த பையை எடுத்து வைத்துக் கொண்டேன். அவன் சென்னையில் தனது கல்லூரி வாழ்க்கையைப் பற்றி நகைச்சுவையாக ஏதேதோ சொல்லிக்கொண்டு வந்தான். மனம் அதில் லயிக்கவில்லை. அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நாகர்கோயில் வந்தது. பையை எடுத்துக்கொண்டு ’ஸீ யூ கோபால், உன்னை சந்தித்தில் மகிழ்ச்சி’ என்று சொல்லிவிட்டு ரயிலை விட்டு இறங்கி நடந்தேன். யாரோ என் பின்னால் நெருக்கமாக வந்தார்கள். திரும்பி பார்த்தேன் கோபாலகிருஷ்ணன் என்ற கோபால்.

‘என்ன கோபால்? என்ன விஷயம் ரயில் இங்கு நிறைய நேரம் நிற்காது.’

‘இல்லை அங்கிள் ஒரு விஷயம்.’

‘என்ன?’

‘உங்களைப் பார்த்தால் ஐந்து வருடத்துக்கு முன் ஒரு சாலை விபத்தில் இறந்த என் அப்பாவைப் போலவே உள்ளது.. இதைச் சொல்ல வேண்டும் போலிருந்தது அதனால் தான் நான் உங்கள் பின்னால் வந்தேன். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. சரி அங்கிள் ரயில் கிளம்பப் போகிறது நான் வருகிறேன்.’

அதிர்ந்து போய் நின்றேன். உள்ளுணர்வு ஏதோ சொல்ல ‘உன் அப்பாவின் பெயர் என்ன?’ என்று போய்க்கொண்டிருந்தவனிடம் கேட்டேன்.

ரயிலில் ஏறியபடியே அவன் திரும்பிச் சொன்னான். ’ராகவன்’

புதன், 20 ஜூலை, 2011

பள்ளிகளும்.. பாடத்திட்டமும்..ஒரு பார்வை! சில ஆலோசனைகள்!!

10-ஆம் வகுப்புக்கான அடிப்படை பாடங்கள் 9-ஆம் வகுப்பிலும், 12-ஆம் வகுப்புக்கான அடிப்படை பாடங்கள் 11-ஆம் வகுப்பிலும் பாடத்திட்டத்தின்படி இருக்கும்போது, பல பள்ளிகள் குறிப்பாக தனியார் பள்ளிகள் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பாடங்களை நடத்துவது என்பது ஒரு வகையான கல்வித் துரோகம்.  12-ஆம் வகுப்பில் கணக்குப்பாடத்தில் எடுத்த மதிப்பெண்கள் 200/200 எடுக்கும் மாணவன் பொறியியல் படிப்பில் கணக்குப்பாடத்தில் தோல்விக்கு என்ன காரணம்? அடிப்படையைக் கற்றுத் தராமல், இது போன்ற குறுக்கு வழிகளில் மதிப்பெண் பெறும் எளிய வகைகளைக் கற்றுத்தரும் பள்ளிகளும் அதை விரும்பியோ விரும்பாமலோ ஊக்கப்படுத்தும் பெற்றோட்களும் தான்.


கல்வித்தரம் பற்றியும், வருங்கால சமுதாயத்தை பற்றியும் சிறிதும் பொறுப்பில்லாமல் செய்யும் இது போன்ற செயல்கள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும். ஏனென்றால் 100 /100 தேர்ச்சி விகிதம் காட்டுவதோ அல்லது மாநில/ மாவட்ட அளவில் இடங்களைப் பிடிப்பதோ ஒரு பள்ளிக்கு பெருமையா? கண்டிப்பாக இல்லை. நல்ல குடிமகன்களை உருவாக்குவதும், சிறந்த அறிஞர்களை நாட்டுக்குத் தருவதுமே பள்ளிகளுக்கு / கல்லூரிகளுக்கு உண்மையான பெருமை. 

புள்ளிவவிபடக் கணக்குப்படிப் பார்த்தால் கூட எத்தனை பேர் தான் படித்த படிப்பு சம்பந்தமான வேலை பார்க்கிறார்கள்?. அப்படிப் பார்த்தாலும் அதில் எத்தனை பேர் தன்னுடைய படிப்பு சம்பந்தமான தொழில்நுட்பம் அல்லது அறிவியலில் ஆழ்ந்த அறிவு பெற்றுள்ளனர்?. 10-ஆம் வகுப்பு அளவிலான எளிதான கணக்குகளை ஒரு ஆய்வுக்காக பொறியியல் மாணவர்களிடையே தேர்வாக நடத்தப்பட்டது. அவர்கள் பதிலளித்தன் அடிப்படையில் ஆய்வு செய்தபோது முடிவுகள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அப்படியென்றால் நம் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது. அடிப்படைக் கல்வியில் முன்னேறாத தேசம் எதிலும் முன்னேற முடியாது. படிக்காமலேயே அவர் முன்னேறவில்லையா? இவர் முன்னேறவில்லையா? உலகப்புகழ் பெறவில்லையா? என்று விதிவிலக்குகளை மட்டும் இனிமேலும் சொல்லி ஒட்டு மொத்த சமுதாயத்துக்கான எடுத்துக்காட்டுகளாகக் காட்ட முடியாது.

இதை மாற்ற என்ன வழி? உறுதியாகத் தெரியவில்லை. ஆனாலும் சில ஆலோசனைகள்.

அதிரடி யோசனைகள் பத்து
1) பள்ளிகளில் 6 முதல் 12 வரை வகுப்புகளில் பருவத்தேர்வுகளை அறிமுகப்படுத்த வேண்டும். இதனால் 10-ஆம் வகுப்பு பாடங்கள் 9-ஆம் வகுப்பிலும், 11-ஆம் வகுப்பு பாடங்கள் 12-ஆம் வகுப்பிலும் எடுப்பது தவிர்க்கப்படும். முழுவாண்டுத் தேர்வில புத்தகம் முழுவதும் படிக்கும் தொல்லையும் மாணவர்களுக்கு இல்லை. புத்தகச்சுமையும் குறையும்.
2) மேற்படிப்புகளுக்கு 9, 10, 11 மற்றும் 12 வகுப்புகளில் குறிப்பிட்ட பாடங்களில் எடுத்த மதிப்பெண்களை கணக்கில் கொள்ளவேண்டும். இதனால் சந்தர்ப்பச் சூழ்நிலையால் 12-ஆம் வகுப்பு இறுதித் தேர்வைச் சரியாக எழுத முடியாமலோ அல்லது விடைத்தாள்களில் மதிப்பீடு செய்யும் போது ஏற்படும் குறைபாடுகளையோ குறைக்க முடியும். குறிப்பிட்ட வகுப்பில் சில பாடங்களில் தோல்வி ஏற்பட்டால் மீண்டும் அதே வகுப்பில் அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த பருவத்தில் தோற்றப் பாடத்தை மட்டும் எழுதினால் போதும். மேலும் புத்திசாலியான மாணவர்களை 8 பருவத் தேர்வு மதிப்பெண்கள் மூலம் இனங்காண முடியும். 
3) பருவத்தேர்வு முறையில் 60% கேள்விகள் பாடப்புத்தகங்களிலிருந்து நேரடியாகவும், 20% கேள்விகள் பாடப்புத்தகங்க்ளிலிருந்து மறைமுகமாகவும் கேட்க வேண்டும். மீதி 20% கேள்விகள் பாடம் சம்பந்தமாக ஆனால் பாடப்புத்தகங்களிலிருந்து அல்லாமல் மாணவர்களின் புரிதல் திறனைச் சோதித்துப் பார்க்கும் விதத்திலும் அமைய வேண்டும். இந்த முறையால் நம்மால் உலகத் தரத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். இதில் மதிப்பீட்டு முறையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும், குறைகளையும் கண்டிப்பாகக் களைய வேண்டும். கணக்கு, அறிவியல் பாடங்கள் குறைந்த பட்சம் 50% கேள்விகள் Multiple Choice முறையில் இருந்தால், உருவடித்து வளவளெவென்று எழுதி பதிலளிக்கும் முறை குறையும். கேள்விகளை எளிதாக்கி, அதனால் 100க்கு 100% அல்லது 99% மதிப்பெண்களை பெற்று ஒருவரும் எந்தச் சாதனையையும் செய்யப் போவதில்லை.

4) பாடத்திட்டங்களில் அரசியல் கலவாமல் வரும் தலைமுறைகளின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய முறையில் அமைய வேண்டும். ஒரு நிரந்தர அறிஞர்கள் குழுவினை அரசியல் வேறுபாடு இல்லாதவாறு அமைக்க வேண்டும். நடப்பு அறிவியல் முன்னேற்றங்களையும், தேவைகளையும் கருத்திற் கொண்டு பாடத்திட்டங்களை அவ்வப்போது மாற்றியமைக்க வேண்டும். சில அரசியல் கட்சிகள், பாடத்திட்டம் கடுமை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூப்பாடு போட்டு பள்ளியில் பாடங்களைக் குறைக்கச் சொல்லுவார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியாது தமிழ் மாணவர்கள் இந்திய அளவில் நடத்தும் தேர்வுகளில் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது. நம் அடுத்த தலைமுறையினர் நம்மை விட புத்திசாலிகள். அவர்களின் புத்திசாலித்தனத்துக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்.
5)குறிப்பாக கணிதம், அறிவியல் பாடங்கள் இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டமாக அமைய வேண்டும். அப்போதுதான் அகில இந்திய அளவில் நடக்கும் போட்டித்தேர்வுகளில் எல்லா மாநில மாணவர்களும் கலந்து கொள்ள முடியும். இப்போது மாநில பாடதிட்டத்தில் படிக்கும் மாணவர்கள் நடுவண் பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் கலந்து வெற்றி பெறுவது என்பது குதிரைக் கொம்பாகாத்தானே உள்ளது.
6) தாய்மொழியில் குறிப்பாக, சிந்திக்கும் மொழியில் கல்வி அமைய வேண்டும். அப்படியிருந்தால் தான் ஒரு பொருளை (Subject) பற்றிய தெளிவான அறிவும், தானாக ஆராய்ந்து முடிவு காணும் திறமையும் வளரும். புரியாமல் மனப்பாடம் செய்யும் பழக்கம் ஒழியும். அப்படியிருந்தால்தான் நம் நாட்டிலேயே நியூட்டனும், ஐன்ஸ்டீனும், ஸ்டீஃபன் ஹாகின்ஸும் உருவாவார்கள். புதிய அறிவியல் விதிகளையும், சிந்தனைகளையும் படிக்க மாட்டார்கள், மாறாக உலகத்துக்கு படைத்துக் காட்டுவார்கள்.

7) மொழிப்பாடங்களை அதற்குண்டான தகுதி வாய்ந்த ஆசிரியரை கொண்டு சிறு வகுப்பு முதலே நடத்த வேண்டும். எடுத்துக்காட்டாக பெரும்பான்மையான தமிழ் ஆசிரியர்கள் கோனார் உரை இல்லாமல் தமிழ் செய்யுள் வகுப்புகள் எடுக்க முடியாத நிலை உள்ளது. அந்த நிலை மாற வேண்டும். ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு ஆங்கில வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தை பயிற்றுவிக்கும் திறமையை வளர்க்க போதிய தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும். இதற்காக பயிற்சியளிக்க தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் போடலாம். அந்த ஆரம்பப் பள்ளி வகுப்புகளிலேயே ஆங்கிலத்தைப் பற்றிய பயத்தை மாணவர்களிடையே போக்க வேண்டும்.
8) இந்தியா பன்முகக் கலாச்சாரத்தைக் கொண்டிருப்பதால் தொடர்பு மொழியில் கண்டிப்பாக நல்ல தேர்ச்சி இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் தேர்ச்சி அதற்கு அவசியம் தேவை.ஏனென்றால் ஆங்கிலம் இந்திய தொடர்பு மொழியாக மட்டுமல்லாமல் உலக அளவிலும் தேவைப்படுகிறது. (எதிர் காலத்தில் உலகத் தொடர்பு மொழி சீனமாகவோ, போர்த்துகீஸமாகவோக் கூட மாறலாம். தேவைப்பட்டால் ஹிந்தியோ வேறு மொழிகளோ அவரவர் விருப்பபடி தனிப்பட்ட முறையிலும் படிக்கலாம். பள்ளிகளில் கட்டாயமாக அதைத் திணிக்கக் கூடாது). ஆனால் ஆங்கிலம் ஒரு தொடர்பு மொழி மட்டுமே என்பதை மனதில் கொள்ள வேண்டும். 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவன் 12 வருடங்கள் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் படித்திருந்தும் ஆங்கிலத்தில் பேசவோ, ஒரு கடிதம் எழுதவோ சிரமப்படும் நிலைதான் உள்ளது. ஆனால் படிப்பறிவில்லாமல் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக இருக்கும் எனக்குத் தெரிந்த சிலர் ஆங்கிலம், பிரெஞ்சு உட்பட பல மொழிகளை அழகாக பேசுகின்றனர். ஆக பிரச்சனை நம் கல்வி முறையில் தான் உள்ளது. இதற்கு மாற்றாக சிறந்த மொழியறிஞர்களை கொண்டு சிறப்பான முறையில், வாழ்க்கைக்கு பயன்படுகின்ற வகையில் ஆங்கில மொழிக்கான பாடத்திட்டத்தை வைக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தும் ஆங்கிலத்தை சரளமாக பேசுகின்ற பிள்ளைகள் இருந்தால் பெற்றோர்கள் ஏன் ஆங்கில வழியில் பிள்ளைகளைப் படிக்க வைக்க நினைக்கிறார்கள்.
9) யானைகளுக்கே புத்தாக்க பயிற்சி கொடுக்கும் இந்த நாட்களில் மனிதர்களுக்கு வேண்டாமா? ஆசிரியர்களுக்கு முழுவாண்டுத் தேர்வு விடுமுறைக் காலங்களில் சிறந்த கல்வியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்டு புத்தாக்கப் பயிற்சிக் கொடுக்க வேண்டும். புத்திக்கூர்மையுள்ள புதிய தலைமுறை மாணவர்களுக்கு பயிற்றிவிக்க போதுமான பயிற்சியை ஆசிரியர்கள் அவ்வப்போது பெற வேண்டும். நமது நாட்டின் குடியர்சுத்தலைவராக இருந்த மதிப்புக்குரிய ராதாகிருஷ்ணன் அவர்கள் இது பற்றித் தெளிவாகக் குறிபிட்டுள்ளார். ஒரு ஆசிரியர் தன்னையும் ஒரு மாணவனாகக் கருதி தொடர்ந்து தனது அறிவை வளர்க்காதவரை ஒரு நல்ல ஆசிரியராகத் தொடரமுடியாது.

10) அரசுப் பள்ளிகளில் / கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தனி வகுப்பு எடுப்பதைக் கடுமையான சட்டத்தின் மூலம் தடைசெய்ய வேண்டும். இதனால் அவர்கள் வகுப்புகளில் அதிக சிரத்தையோடு பாடம் நடத்துவார்கள். 
இதெல்லாம் நடந்தால் அந்நிய நாட்டில் வேலை தேடும் நிலை மாறி, அடுத்தவற்கு வேலைக் கொடுக்கும் ஒரு புதிய சமுதாயம் அமையும் என்பது என் தீர்க்கமான எண்ணம்.




தோழர்களின் இது பற்றிய கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.



நன்றி!

செவ்வாய், 19 ஜூலை, 2011

அவளைப்போலவே நீயும்...


கதவைத் திறந்தால் உடனே பிரகாசிக்கிறாய், 


இதமாய் குளிர்விக்கிறாய்


குளிர்சாதனப்பெட்டியே!

நியாயமா?



இருட்டை விட்டுவிட்டு ஏன்


வெளிச்சத்துடன் சண்டையிடுகின்றன



கொசுக்கள்

அழுது வடிகிறது


வெளிச்சக் கண்ணீரை


வீதியில் வடித்து அழுகிறது


தெருவிளக்கு

பெயர் பொருத்தம்



கண்ணோடு உறவு


காதுடன் அரவணைப்பு 


பெயர் மூக்குக்கண்ணாடி

தூங்காத நண்பன்



தூக்கம் வந்த பிறகும்


மார்பின் மீது விழித்திருக்கிறது


புத்தகங்கள்

சக்களத்தி சண்டை?



ஒவ்வொரு நிமிடத்திலும் அவளுடன் சந்திப்பு


மணிநேர காத்திருப்பு எனக்கா? சண்டையிடும்


கடிகார முட்கள்

தொடர் தொல்லை



வயிற்றுக்கு உணவு கிடைக்கும் 


கொஞ்சம் பொறுத்திருங்கள் வரட்டும்


விளம்பர இடைவேளை!

ஞாயிறு, 17 ஜூலை, 2011

தடுமாற்றம்





வார்த்தைத் தடுமாறும் போது


அதை மறைக்க முயல்கிறது


போலியாக ஒரு இருமல்



சனி, 16 ஜூலை, 2011

நீங்களும் கூப்பிடுங்கள்


எத்தனை முறை அழைத்தாலும்
வெளியே வர மறுக்கிறது
கிணற்றுக்குள்ளிருந்து நிலா!

எலி மருந்து விளம்பரம்


உள்ளே சாப்பிட்டு வெளியே சாகும்
விளம்பரம் எழுதப்பட்ட இடம்
டாஸ்மாக் மதுக்கடை

தேடிப்பார்க்கிறேன்



என் வீட்டு சுவற்றின் போஸ்டர்களின் 
பின்னால் ஒளிந்து கிடக்கிறது
‘விளம்பரம் செய்யாதீர்’

அடையாளம்



கூட்டல்(+), கழித்தல்(-), பெருக்கல்(X)
குறியீடுகளின் உருவமாய்
துடைப்பம்

சேமிப்பு


நியான் விளக்கில் ஒளிர்ந்த 
விளம்பரம் சேமிக்கச் சொன்னது
எரிசக்தியை!


வரவேற்பு


வீட்டின் முகப்பில் நல்வரவு
தொங்கிய பலகையில்
’நாய்கள் ஜாக்கிரதை’

சுடச்சுட விற்பனை



எங்கள் ஊரில் புத்தகக்கண்காட்சி
வேகமாய் விற்றுத் தீர்ந்தது
மசால் வடை(?)

சினேகிதம்



நம் தாயவிளையாட்டில்
நகர்ந்து போகும் நினைவாக
உடைந்த உன் வளையல் துண்டு!

மரம் வளர்ப்போம்!!



வீதிதோறும் மின்சார மரங்கள்!
நீரூற்றி வளர்ப்பது
தெருநாய்கள்!!