புதன், 20 ஜூலை, 2011

பள்ளிகளும்.. பாடத்திட்டமும்..ஒரு பார்வை! சில ஆலோசனைகள்!!

10-ஆம் வகுப்புக்கான அடிப்படை பாடங்கள் 9-ஆம் வகுப்பிலும், 12-ஆம் வகுப்புக்கான அடிப்படை பாடங்கள் 11-ஆம் வகுப்பிலும் பாடத்திட்டத்தின்படி இருக்கும்போது, பல பள்ளிகள் குறிப்பாக தனியார் பள்ளிகள் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பாடங்களை நடத்துவது என்பது ஒரு வகையான கல்வித் துரோகம்.  12-ஆம் வகுப்பில் கணக்குப்பாடத்தில் எடுத்த மதிப்பெண்கள் 200/200 எடுக்கும் மாணவன் பொறியியல் படிப்பில் கணக்குப்பாடத்தில் தோல்விக்கு என்ன காரணம்? அடிப்படையைக் கற்றுத் தராமல், இது போன்ற குறுக்கு வழிகளில் மதிப்பெண் பெறும் எளிய வகைகளைக் கற்றுத்தரும் பள்ளிகளும் அதை விரும்பியோ விரும்பாமலோ ஊக்கப்படுத்தும் பெற்றோட்களும் தான்.


கல்வித்தரம் பற்றியும், வருங்கால சமுதாயத்தை பற்றியும் சிறிதும் பொறுப்பில்லாமல் செய்யும் இது போன்ற செயல்கள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும். ஏனென்றால் 100 /100 தேர்ச்சி விகிதம் காட்டுவதோ அல்லது மாநில/ மாவட்ட அளவில் இடங்களைப் பிடிப்பதோ ஒரு பள்ளிக்கு பெருமையா? கண்டிப்பாக இல்லை. நல்ல குடிமகன்களை உருவாக்குவதும், சிறந்த அறிஞர்களை நாட்டுக்குத் தருவதுமே பள்ளிகளுக்கு / கல்லூரிகளுக்கு உண்மையான பெருமை. 

புள்ளிவவிபடக் கணக்குப்படிப் பார்த்தால் கூட எத்தனை பேர் தான் படித்த படிப்பு சம்பந்தமான வேலை பார்க்கிறார்கள்?. அப்படிப் பார்த்தாலும் அதில் எத்தனை பேர் தன்னுடைய படிப்பு சம்பந்தமான தொழில்நுட்பம் அல்லது அறிவியலில் ஆழ்ந்த அறிவு பெற்றுள்ளனர்?. 10-ஆம் வகுப்பு அளவிலான எளிதான கணக்குகளை ஒரு ஆய்வுக்காக பொறியியல் மாணவர்களிடையே தேர்வாக நடத்தப்பட்டது. அவர்கள் பதிலளித்தன் அடிப்படையில் ஆய்வு செய்தபோது முடிவுகள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அப்படியென்றால் நம் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது. அடிப்படைக் கல்வியில் முன்னேறாத தேசம் எதிலும் முன்னேற முடியாது. படிக்காமலேயே அவர் முன்னேறவில்லையா? இவர் முன்னேறவில்லையா? உலகப்புகழ் பெறவில்லையா? என்று விதிவிலக்குகளை மட்டும் இனிமேலும் சொல்லி ஒட்டு மொத்த சமுதாயத்துக்கான எடுத்துக்காட்டுகளாகக் காட்ட முடியாது.

இதை மாற்ற என்ன வழி? உறுதியாகத் தெரியவில்லை. ஆனாலும் சில ஆலோசனைகள்.

அதிரடி யோசனைகள் பத்து
1) பள்ளிகளில் 6 முதல் 12 வரை வகுப்புகளில் பருவத்தேர்வுகளை அறிமுகப்படுத்த வேண்டும். இதனால் 10-ஆம் வகுப்பு பாடங்கள் 9-ஆம் வகுப்பிலும், 11-ஆம் வகுப்பு பாடங்கள் 12-ஆம் வகுப்பிலும் எடுப்பது தவிர்க்கப்படும். முழுவாண்டுத் தேர்வில புத்தகம் முழுவதும் படிக்கும் தொல்லையும் மாணவர்களுக்கு இல்லை. புத்தகச்சுமையும் குறையும்.
2) மேற்படிப்புகளுக்கு 9, 10, 11 மற்றும் 12 வகுப்புகளில் குறிப்பிட்ட பாடங்களில் எடுத்த மதிப்பெண்களை கணக்கில் கொள்ளவேண்டும். இதனால் சந்தர்ப்பச் சூழ்நிலையால் 12-ஆம் வகுப்பு இறுதித் தேர்வைச் சரியாக எழுத முடியாமலோ அல்லது விடைத்தாள்களில் மதிப்பீடு செய்யும் போது ஏற்படும் குறைபாடுகளையோ குறைக்க முடியும். குறிப்பிட்ட வகுப்பில் சில பாடங்களில் தோல்வி ஏற்பட்டால் மீண்டும் அதே வகுப்பில் அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த பருவத்தில் தோற்றப் பாடத்தை மட்டும் எழுதினால் போதும். மேலும் புத்திசாலியான மாணவர்களை 8 பருவத் தேர்வு மதிப்பெண்கள் மூலம் இனங்காண முடியும். 
3) பருவத்தேர்வு முறையில் 60% கேள்விகள் பாடப்புத்தகங்களிலிருந்து நேரடியாகவும், 20% கேள்விகள் பாடப்புத்தகங்க்ளிலிருந்து மறைமுகமாகவும் கேட்க வேண்டும். மீதி 20% கேள்விகள் பாடம் சம்பந்தமாக ஆனால் பாடப்புத்தகங்களிலிருந்து அல்லாமல் மாணவர்களின் புரிதல் திறனைச் சோதித்துப் பார்க்கும் விதத்திலும் அமைய வேண்டும். இந்த முறையால் நம்மால் உலகத் தரத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். இதில் மதிப்பீட்டு முறையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும், குறைகளையும் கண்டிப்பாகக் களைய வேண்டும். கணக்கு, அறிவியல் பாடங்கள் குறைந்த பட்சம் 50% கேள்விகள் Multiple Choice முறையில் இருந்தால், உருவடித்து வளவளெவென்று எழுதி பதிலளிக்கும் முறை குறையும். கேள்விகளை எளிதாக்கி, அதனால் 100க்கு 100% அல்லது 99% மதிப்பெண்களை பெற்று ஒருவரும் எந்தச் சாதனையையும் செய்யப் போவதில்லை.

4) பாடத்திட்டங்களில் அரசியல் கலவாமல் வரும் தலைமுறைகளின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய முறையில் அமைய வேண்டும். ஒரு நிரந்தர அறிஞர்கள் குழுவினை அரசியல் வேறுபாடு இல்லாதவாறு அமைக்க வேண்டும். நடப்பு அறிவியல் முன்னேற்றங்களையும், தேவைகளையும் கருத்திற் கொண்டு பாடத்திட்டங்களை அவ்வப்போது மாற்றியமைக்க வேண்டும். சில அரசியல் கட்சிகள், பாடத்திட்டம் கடுமை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூப்பாடு போட்டு பள்ளியில் பாடங்களைக் குறைக்கச் சொல்லுவார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியாது தமிழ் மாணவர்கள் இந்திய அளவில் நடத்தும் தேர்வுகளில் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது. நம் அடுத்த தலைமுறையினர் நம்மை விட புத்திசாலிகள். அவர்களின் புத்திசாலித்தனத்துக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்.
5)குறிப்பாக கணிதம், அறிவியல் பாடங்கள் இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டமாக அமைய வேண்டும். அப்போதுதான் அகில இந்திய அளவில் நடக்கும் போட்டித்தேர்வுகளில் எல்லா மாநில மாணவர்களும் கலந்து கொள்ள முடியும். இப்போது மாநில பாடதிட்டத்தில் படிக்கும் மாணவர்கள் நடுவண் பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் கலந்து வெற்றி பெறுவது என்பது குதிரைக் கொம்பாகாத்தானே உள்ளது.
6) தாய்மொழியில் குறிப்பாக, சிந்திக்கும் மொழியில் கல்வி அமைய வேண்டும். அப்படியிருந்தால் தான் ஒரு பொருளை (Subject) பற்றிய தெளிவான அறிவும், தானாக ஆராய்ந்து முடிவு காணும் திறமையும் வளரும். புரியாமல் மனப்பாடம் செய்யும் பழக்கம் ஒழியும். அப்படியிருந்தால்தான் நம் நாட்டிலேயே நியூட்டனும், ஐன்ஸ்டீனும், ஸ்டீஃபன் ஹாகின்ஸும் உருவாவார்கள். புதிய அறிவியல் விதிகளையும், சிந்தனைகளையும் படிக்க மாட்டார்கள், மாறாக உலகத்துக்கு படைத்துக் காட்டுவார்கள்.

7) மொழிப்பாடங்களை அதற்குண்டான தகுதி வாய்ந்த ஆசிரியரை கொண்டு சிறு வகுப்பு முதலே நடத்த வேண்டும். எடுத்துக்காட்டாக பெரும்பான்மையான தமிழ் ஆசிரியர்கள் கோனார் உரை இல்லாமல் தமிழ் செய்யுள் வகுப்புகள் எடுக்க முடியாத நிலை உள்ளது. அந்த நிலை மாற வேண்டும். ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு ஆங்கில வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தை பயிற்றுவிக்கும் திறமையை வளர்க்க போதிய தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும். இதற்காக பயிற்சியளிக்க தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் போடலாம். அந்த ஆரம்பப் பள்ளி வகுப்புகளிலேயே ஆங்கிலத்தைப் பற்றிய பயத்தை மாணவர்களிடையே போக்க வேண்டும்.
8) இந்தியா பன்முகக் கலாச்சாரத்தைக் கொண்டிருப்பதால் தொடர்பு மொழியில் கண்டிப்பாக நல்ல தேர்ச்சி இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் தேர்ச்சி அதற்கு அவசியம் தேவை.ஏனென்றால் ஆங்கிலம் இந்திய தொடர்பு மொழியாக மட்டுமல்லாமல் உலக அளவிலும் தேவைப்படுகிறது. (எதிர் காலத்தில் உலகத் தொடர்பு மொழி சீனமாகவோ, போர்த்துகீஸமாகவோக் கூட மாறலாம். தேவைப்பட்டால் ஹிந்தியோ வேறு மொழிகளோ அவரவர் விருப்பபடி தனிப்பட்ட முறையிலும் படிக்கலாம். பள்ளிகளில் கட்டாயமாக அதைத் திணிக்கக் கூடாது). ஆனால் ஆங்கிலம் ஒரு தொடர்பு மொழி மட்டுமே என்பதை மனதில் கொள்ள வேண்டும். 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவன் 12 வருடங்கள் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் படித்திருந்தும் ஆங்கிலத்தில் பேசவோ, ஒரு கடிதம் எழுதவோ சிரமப்படும் நிலைதான் உள்ளது. ஆனால் படிப்பறிவில்லாமல் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக இருக்கும் எனக்குத் தெரிந்த சிலர் ஆங்கிலம், பிரெஞ்சு உட்பட பல மொழிகளை அழகாக பேசுகின்றனர். ஆக பிரச்சனை நம் கல்வி முறையில் தான் உள்ளது. இதற்கு மாற்றாக சிறந்த மொழியறிஞர்களை கொண்டு சிறப்பான முறையில், வாழ்க்கைக்கு பயன்படுகின்ற வகையில் ஆங்கில மொழிக்கான பாடத்திட்டத்தை வைக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தும் ஆங்கிலத்தை சரளமாக பேசுகின்ற பிள்ளைகள் இருந்தால் பெற்றோர்கள் ஏன் ஆங்கில வழியில் பிள்ளைகளைப் படிக்க வைக்க நினைக்கிறார்கள்.
9) யானைகளுக்கே புத்தாக்க பயிற்சி கொடுக்கும் இந்த நாட்களில் மனிதர்களுக்கு வேண்டாமா? ஆசிரியர்களுக்கு முழுவாண்டுத் தேர்வு விடுமுறைக் காலங்களில் சிறந்த கல்வியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்டு புத்தாக்கப் பயிற்சிக் கொடுக்க வேண்டும். புத்திக்கூர்மையுள்ள புதிய தலைமுறை மாணவர்களுக்கு பயிற்றிவிக்க போதுமான பயிற்சியை ஆசிரியர்கள் அவ்வப்போது பெற வேண்டும். நமது நாட்டின் குடியர்சுத்தலைவராக இருந்த மதிப்புக்குரிய ராதாகிருஷ்ணன் அவர்கள் இது பற்றித் தெளிவாகக் குறிபிட்டுள்ளார். ஒரு ஆசிரியர் தன்னையும் ஒரு மாணவனாகக் கருதி தொடர்ந்து தனது அறிவை வளர்க்காதவரை ஒரு நல்ல ஆசிரியராகத் தொடரமுடியாது.

10) அரசுப் பள்ளிகளில் / கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தனி வகுப்பு எடுப்பதைக் கடுமையான சட்டத்தின் மூலம் தடைசெய்ய வேண்டும். இதனால் அவர்கள் வகுப்புகளில் அதிக சிரத்தையோடு பாடம் நடத்துவார்கள். 
இதெல்லாம் நடந்தால் அந்நிய நாட்டில் வேலை தேடும் நிலை மாறி, அடுத்தவற்கு வேலைக் கொடுக்கும் ஒரு புதிய சமுதாயம் அமையும் என்பது என் தீர்க்கமான எண்ணம்.




தோழர்களின் இது பற்றிய கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.



நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக