சனி, 23 ஜூலை, 2011

டிஸ்சார்ஜ்

லதா அந்த மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மாணவ செவிலியாக பணியாற்றப் போவதை மகிழ்ச்ச்சியாகக் கருதினாள். அவள் படிக்கும் நர்ஸிங் ஸ்கூலில் இருந்து இதற்கு வழிவகை செய்திருந்தார்கள். மொத்தம் மூன்று மருத்துவமனைகளுக்கு சுழற்சி முறையில் பிரித்து அனுப்புவார்கள். முதலாவதாகவே நகரின் பிரபல மருத்துவமனைக்குப் போகும் வாய்ப்பு வந்தது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

முதல் நாள் அவளுக்குப் பணி எதுவும் ஒதுக்கப் படவில்லை. சீனியர் நர்ஸ் இருக்கும் அறையில் இருக்கச் சொன்னார்கள். சீனியர் சிஸ்டர் வந்தார். ஒரு புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது அந்த மருத்துவமனையின் சட்டத்திட்டங்கள் அடங்கிய புத்தகம். ‘இந்தப் புத்தகத்தின்படிதான் நடக்க வேண்டும். இதை நன்கு படித்து நினைவில் கொள்ள வேண்டும். இந்த மருத்துவமனையில் நகரின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம் வருவார்கள் எந்த விதத்திலும் தவறு நடந்து விடக்கூடாது. வேண்டுமானால் இதை எடுத்துச் சென்று படித்துவிட்டு நாளை கொண்டு வா. நாளை உனக்கு ஜெனரல் டூட்டி. பொதுவாக மாணவ நர்ஸ்களுக்கு ஜெனரல் டூட்டிதான் போடுவார்கள். காலை 9 மணிக்கு முன்பாக நீ இங்கு இருக்க வேண்டும். இன்று நீ இரண்டாவது மாடியில் உள்ள நூலகத்தில் சென்று செவிலியர் படிப்பு சம்பந்தமான புத்தகங்களைப் படித்துக் கொண்டிரு’ என்று சீனியர் சிஸ்டர் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.


அடுத்தநாள் நாலாவது மாடியில் உள்ள வார்டில் டியூட்டி. ஏற்கனவே நான்கு பேர் இருந்தார்கள் அவர்களோடு சேர்ந்து லதா ஐந்தாவது. மொத்தம் இருபது அறைகள் இவர்கள் பொறுப்பில் வரும். இருபது அறையில் இருக்கும் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது. டாக்டர்கள் வரும்போது உடன் கேஸ்ஃபைலையும், உபகரணங்களையும் அதற்குரிய வண்டியில் வைத்து உருட்டிச்செல்வது, அவசர உதவி தேவைப்படும் நேரத்தில் ஓடிச்சென்று உதவுவது இவைதான் வார்டில் செய்யவேண்டிய பணிகள். இதோடு தினமும் படுக்கையில் உள்ள விரிப்புத் துணிகளை மாற்றுவது, நோயாளிகளின் உடம்பைத் துடைத்து அவர்களின் உடைகளை மாற்றுவது போன்ற பணிகளும் செய்யவேண்டும். 


தினமும் காலை 9:30க்கு டாக்டர் வார்டுக்கு வருவார். அவர் நோயாளிகளைப் பார்க்கச் செல்லும்போது அவருடன் மூன்று நர்ஸ்கள் செல்ல வேண்டும். ஒருவர் தொலைபேசி ஏதும் வந்தால் அதை அட்டெண்ட் செய்யும் பொருட்டு அறையில் இருப்பார். ரவுண்ட்ஸ் செல்லும் நர்ஸ்கள் டாக்டர் சொல்லும் குறிப்புகளை எழுதிக்கொள்ள வேண்டும். நோயாளிகளின் கேஸ் ஃபைலை முன்பாகவே படித்து வைத்து டாக்டர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். டாக்டர் வரும்போது அந்த வார்டு பரபரப்பாக இருக்கும். 

அன்றும் 9:30க்கு டாக்டர் வந்தார். மூன்று ஸ்டாஃப் நர்ஸுகளுடன் லதாவும் ரவுண்ட்ஸ்க்கு போனாள். ஒவ்வொரு அறையாக நோயாளிகளைப் பார்த்துக்கொண்டே டாக்டர் வந்தார். டாக்டர் வயதில் இளையவர். நோயாளிகளிடம் சிரித்துக்கொண்டே அவர்களுக்கு ஆறுதலாகப் பேசினார். பதினாலாம் எண் அறை வந்ததும் அது பூட்டிக்கிடந்தது. கேஸ்ஃபைலை பார்த்து இந்த நோயாளி இன்று வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கலாம் என்று சீனியர் டாக்டர் குறிப்பு எழுதியிருக்கிறார் என்று ஒரு நர்ஸ் சொன்னாள்.ஒரே ஒரு ஊசி மருந்து மட்டும் பாக்கி இருந்தது, அதுவும் இன்று காலைப் போட்டாகிவிட்டது என்றாள். டாக்டர் கடைசியில் இந்த நோயாளியைப் பார்க்கிறேன் என்று மற்ற நோயாளிகளைப் பார்க்கச் சென்றார். 


லதா அந்தக் கேஸ்கட்டைப் பார்த்தாள். நோயாளியின் பெயர் நாதம் என்று எழுதியிருந்தது. டாக்டர் ரவுண்ட்ஸின் இருபதாம் நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, முதல் அறையில் உள்ள நோயாளி அவசரத் தேவைக்காக அழைக்க ’டிரிப்ஸ் மாற்றுவதற்காக இருக்கும், அறையில் இருக்கும் ஸ்டாஃப் நர்ஸை அழைத்துக் கொண்டு போய்ப் பார்’ என்று லதாவைப் போய் பார்க்கச் சொன்னார்கள். 

லதா நர்ஸ் அறையில் இருந்த மற்ற நர்ஸையும் அழைத்துக்கொண்டு முதல் அறைக்கு வந்து தீரும் தரும்வாயில் இருந்த டிரிப்ஸை மாற்றினாள். அறையில் இருந்தவன் ஒரு சிறுவன். அவன் சிரித்தபடியே பேசிக்கொண்டிருந்தான். ’அக்கா, இதோடு டிரிப்ஸ் முடியுமா?’ என்றாள். ’ஆமாம்’ என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு வெளியே வரும்போது டாக்டர் போய்விட்டிருந்தார். 


மீண்டும் அறைக்கு வந்த லதா நோயாளியின் கேஸ் புத்தகங்களைப் பார்த்தாள். பதினான்காம் அறை நோயாளியை வீட்டுக்கு அனுப்பலாம் என்று ரவுண்ட்ஸ் போன டாக்டரும் எழுதி ஒப்பிட்டிருந்தார். ’லதா, பதினான்காம் அறை எண் நோயாளி பணம் கட்டிய ரசீதைத் காட்டிவுடன் இந்த டிஸ்சார்ஜ் கார்டைக் கொடுக்க வேண்டும். நோயாளியை சக்கர நாற்காலியில் அமரவைத்து உருட்டிச்சென்று லிஃப்டில் தரைத்தளம் செல்ல வேண்டும். பிறகு அங்குள்ள அட்டெண்டர் பார்த்துக்கொள்வார். எக்காரணம் கொண்டும் நடத்திக் கூட்டிச் சென்று விடாதே’ என்று ஒரு ஸ்டாஃப் நர்ஸ் சொன்னாள்.


லதா பதினான்காம் எண் அறைக்கு சென்றாள். ஏற்கனவே உடை மாற்றி ஒரு பெரியவர் இருந்தார். படுக்கையின் அருகே ஒரு பையும் தயாராக இருந்தது.


 ’புறப்பட ரெடியா ஐயா?’ என்று சிரித்தபடியே கேட்டாள். 


’ஆமாம் ரெடி’ என்று சிரித்தபடியே சொன்னார். 


லதா திரும்ப வந்து சக்கர நாற்காலியை உருட்டி வந்தாள். 


‘பெரியவரே இந்த நாற்காலியில் அமருங்கள் உங்களை தரைத்தளம் வரை உருட்டிச்செல்கிறேன்’


’எனக்கெதற்கு நான் கல்லு போல இருக்கிறேன்.’


‘மன்னிக்க வேண்டும் ஐயா, மருத்துவமனை சட்டப்படி நான் உங்களை நடத்தி கூட்டிச் செல்ல முடியாது. தயவு செய்து சக்கர நாற்காலியில் வாருங்கள். இதில் எனக்கு எந்த ஒரு சிரமும் இல்லை.’பெரியவரை வற்புறுத்தி சக்கர நாற்காலியில் அழைத்துகொண்டு லிஃப்டில் கீழே இறங்கி வந்தாள். 


அட்டெண்டரைக் காணவில்லை. மர்த்துவமனை சட்டப்படி நோயாளியைத் தனியாக விடக்கூடாது. பெரியவருடன் பேச்சுக் கொடுத்தாள்.


‘ஐயா, உங்களுடன் உங்கள் மனைவி வரவில்லையா?’


‘என்ன இப்படி கேட்கிறாய், அவள் உள்ளே உள்ள குளியல் அறையில் மருத்துவமனை ஆடைகளை உடைமாற்றிக் கொண்டிருக்கிறாள்’


’அப்படியென்றால் அவர்கள் பெயர்..?’


‘நாதம்’






2 கருத்துகள்:

  1. ஆகா... இது சூப்பரு!!
    நோயாளிக்கு பதில் அவரைப் பார்க்க வந்தவரை அழைத்து வந்தாச்சா!!

    பதிலளிநீக்கு
  2. நல்லவேளை டிஸ்சார்ஜ் பண்ற அன்னைக்கு வந்தார். ஒருவேளை ஆபரேஷன் பண்ற அன்னைக்கு வந்திருந்தா....

    பதிலளிநீக்கு