சனி, 23 ஜூலை, 2011

ஒரு கடிதம்


ஒரு கடிதம்


பாங்க், இன்ஸூரன்ஸ், டாக்ஸ் போன்ற வேலைகளை செய்ய சனிக்கிழமை தான் எனக்கு தோதுப்படும். சனிக்கிழமை எனக்கு அலுவலகம் கிடையாது. மற்ற நாட்களில் இரவு வரை வேலையிருக்கும். எனவே பெரும்பாலும் சனிக்கிழமைகளில் இந்த வேலைகளை முடித்து விடுவேன். 

ஒரு பணபரிமாற்றம் சம்பந்தமாக வங்கிக்கு ஒரு கடிதம் கொடுக்க வேண்டி வந்தது. இன்று சனிக்கிழமை எப்படியும் அதை முடித்து விட வேண்டும். கம்ப்யூட்டரில் டைப் செய்து கடிதத்தை முடித்து விட்டேன். பிரிண்ட் கொடுத்தால் பிரிண்டர் மக்கர் செய்தது. கம்ப்யூட்டரில் எனக்கு தெரிந்த ஒரே ரிப்பேர் வேலை கார்டைக் கழற்றி மாட்டுவது. வழக்கம் போல கார்டை கழற்றி மாட்டினேன். ஒன்றும் வேலைக்கு உதவவில்லை. பிரிண்டர் சாஃப்ட்வேரை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு, மீண்டும் சாஃப்டுவேரை இன்ஸ்டால் செய்து பார்த்தேன். ஆனாலும் தேறவில்லை. சரி பென் டிரைவில் காப்பி செய்து எடுத்து ஆஃலிஸில் பிரிண்ட் செய்து கொள்ளலாம் என்று பென் டிரைவில் காப்பி செய்து கொண்டேன். அடுத்த வாரம் கடிதத்தைக் கொடுத்துக் கொள்ளலாம் என்று ஆஃபிஸ் கொண்டு போகும் பேக்கில் பென் டிரைவை போட்டு வைத்தேன்.அலுவலக வேலையில் பிரிண்ட் எடுக்கும் விஷயம் மறந்தே விட்டது. பேக்கில் இருந்த பென் டிரைவை எடுக்கவே இல்லை. அடுத்த சனிக்கிழமைதான் வங்கிக்கு கடிதம் கொடுக்க வேண்டிய ஞாபகம் வந்தது. பிரிண்டர் சரியாகியிருக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் ஒரு முயற்சி செய்து பார்த்தேன். கண் சிமிட்டிக்கூட பார்க்கவில்லை. சரி அலுவலக முகவரிக்கு இ-மெயிலில் கடிதத்தை அனுப்பி வைப்போம். அலுவலகத்தில் பார்த்தால் ஞாபகம் வரும்.பிரிண்ட செய்து கொள்ளலாம். என்ன இன்னும் ஒரு வாரத்துக்கு கடிதம் கொடுக்கும் வேலையை ஒத்திப் போடவேண்டும்.

அலுவலகத்தில் வருட முடிவுக்கு முன் நடத்த வேண்டிய கூட்டங்கள், மினிட்ஸ் சரிபார்ப்பு, ரிப்போர்ட் வர்க் என்று இந்த வாரமும் டைட் வர்க். எனக்கு ஒரு பழக்கம் நல்லதா கெட்டதா எனத் தெரியவில்லை, ஆஃபிஸுக்கு போய் விட்டால் பெர்ஸனல் வர்க் எல்லாமே மறந்து விடும். அதாவது சுருக்கமாக இந்த வாரமும் பிரிண்ட் எடுக்கவில்லை.

இன்று சனிக்கிழமை, இன்னும் ஒத்திப் போட முடியாது. பாங்கிலிருந்து வீட்டுக்கு ஃபோன் செய்து விட்டார்கள். ஃபோன் அட்டெண்ட் செய்தது என் மனைவி. இனி பாங்க் மானேஜர் சும்மா இருந்தாலும் இவள் இருக்க விட மாட்டாள். என்ன ஆச்சு பாங்க் மாட்டர் என்று நிமிஷத்துக்கொருமுறை கேட்பாள். கடைசியில் ஒரு வழியாக பாங்க் வேலையை முடித்து விட்டேன். எப்படி என்கிறீர்களா? வேறு ஒன்றுமில்லை, வெள்ளைக் காகித்தில் பேனாவால் கடிதத்தை எழுதி நேரில் சென்று கொடுத்து விட்டு வந்து விட்டேன்.

1 கருத்து:

  1. ஒரு தமிழ் வார பத்திரிகையில் மூங்கில் மூச்சு என்று திரு சுகா என்பவர் எழுதுகிறார். வாசிக்கும் மனோபாவம் என்பது ஒரு எழுத்தின் தன்மையில் இருக்க வேண்டும். அது உங்களில் நிறையவே இருக்கிறது. ரசனை, ஈர்ப்பு, கவித்துவம், வாழ்வியல் தத்துவம், அடுத்த தலைமுறைக்கான செய்திகள் இப்படியே ........ மனதும், எண்ணங்களும் விசாலமாக இருப்பதாலேயே இது சாத்தியப்படும்...

    வாழ்த்துகள்...தளம் மேலும் வளர ...நானும் இங்கு கற்களை எரிகிறேன்..படிக்கல்லாகவோ, சுவர்க்கல்லாகவோ பயன்படுத்துங்கள்.


    நாகேஸ்வரன்

    பதிலளிநீக்கு