வியாழன், 21 ஜூலை, 2011

அவன் தானா இவன்?

எழும்பூரில் புறப்படத் தயாராக இருந்தது அனந்தபுரி எக்ஸ்பிரஸ். நான் ராகவன். வயது நாற்பத்தி ஐந்து. தனியார் அலுவலகத்தில் வேலை. நாகர்கோயிலில் என்னுடைய நெருங்கிய உறவினருக்கு திருமணம். அதில் கலந்து கொள்ளப் போய்க் கொண்டிருக்கிறேன். கடைசி நேரத்தில் தான் எனக்கு டிக்கெட் கன்ஃபார்ம் ஆனது. அரக்கப் பரக்க ஓடி வந்து இப்போது எஸ்-8 கோச்சில் அமர்ந்து இருக்கிறேன். எனக்கு அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டிருந்தது. சௌகரியக் குறைவாக இருந்தாலும் பொதுவாக அப்பர் பெர்த் எனக்குப் பிடித்தமான ஒன்று. மூன்று பெர்த் உள்ள கோச்சுகளில், ஏறி படுக்கும் அளவுக்கு உடல் வலு இடம் கொடுக்கும் வரை, அப்பர் பெர்த்தில் படுத்தபடி பயணம் செய்வது பரம சுகம். காலையில் பாதி உறக்கத்தில் இருக்கும் போது யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். 
நான் நல்ல கலகலப்பாகப் பழகக் கூடியவன் தான். கழிந்த சில வருடங்களாக நான் அப்படி இல்லை. எனக்கு வாழ்க்கையில் நடந்த ஒரு சோக நிகழ்ச்சிக்குப் பிறகு நான் இப்படி மாறி விட்டேன். கொண்டு வந்த சிறிய பையையும் அப்பர் பெர்த்தில் போட்டுவிட்டு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன். எதிரே உள்ள இருக்கையில் வயதான கணவன், மனைவி இருந்தார்கள். உடன் இருப்பது மகன் போலத் தெரியவில்லை, உறவினராக இருக்கலாம். சைடில் இருக்கும் இரண்டு பேரும் கணவன், மனைவிதான். நடுத்தர வயது இருக்கும். என்னிருக்கையின் அருகில் ஒரு முப்பந்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்மணி இருந்தார். வந்ததிலிருந்து செல்போனை கீழே வைக்கவில்லை. ஒன்று அவருக்கு அழைப்பு வரும் அல்லது அவர் யாரையாவது அழைத்துக் கொண்டிருந்தார். மலையாளமும் தமிழுமாக மாறி மாறி பேசிக் கொண்டிருந்தார். இன்னொருவரின் இடம் காலியாக இருந்தது. ஒருவேளை தாம்பரத்தில் ஏறுவாரோ என்னமோ.

ரயில் புறப்பட சிக்னல் கொடுத்து விட்டார்கள். வண்டியும் நகரத் தொடங்கியது. 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் வியர்க்க விறுவிறுக்க வந்து அருகில் வந்து அமர்ந்தான். ஓடி வந்திருக்க வேண்டும். நல்ல உயரம். பொது நிறம். பார்த்து சிரித்தான். நானும் சிரித்து வைத்தேன்.


நான் கேட்காமலேயே ‘டிராஃபிக் ஜாம்’ என்றான்.

‘அங்கிள் திருவனந்தபுரமா?’ வார்த்தையில் மலையாள வாசம் வீசியது.

‘இல்லை. நாகர்கோயில். நீ….நீங்க என்ன திருவனந்தபுரமா?’

‘அதே. நீங்க என்னை நீன்னே கூப்பிடலாம் அங்கிள். என் பெயர் கோபாலகிருஷ்ணன்’

எனக்கு ஏனோ அவனுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது. அவனுடைய ஒவ்வொரு அசைவும் ஐந்து வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்த என்னுடைய மகனின் ஞாபகம் வந்தது. அவன் சிரிப்பது, அடிக்கடி முடியைக் கோதுவது, கண்களை சுருக்குவது எல்லாமே என் மகன் செய்வது போலவே இருந்தது எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. என் மகன் இறக்கும் போது அவனுக்கு வயது பதினைந்து. இப்போது இருந்திருந்தால் இவன் வயது இருக்கும்.அவன் பெயரும் கோபால்தான். என்ன ஒரு பெயர் பொருத்தம். வளர்ந்து பைலட் ஆகவேண்டும் என்பது என் மகனுக்கு விருப்பமாக இருந்தது. ஆனால் ஒரு சாலை விபத்து எல்லாத்தையும் முடித்து வைத்து விட்டது.

‘திருவனந்தபுரத்தில் யார் இருக்கிறார்கள் கோபால்?’

‘எனக்கு சொந்த ஊர் திருவனந்தபுரம்தான். நான் இங்கு ஏரோனாட்டிகல் இஞ்சினியரிங் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறேன்.’

‘நன்றாக தமிழ் பேசுகிறாயே.’

‘திருவனந்தபுரத்தில் பலரும் தமிழ்ப்படங்கள் பார்ப்பார்கள், தமிழ் பேசுவார்கள். என்னுடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர்களும் தமிழ் ஆட்கள்தான். அதனால் தமிழ் ஆரம்பத்திலேயே கொஞ்சம் தெரியும். இப்போது மூன்று வருடங்கள் தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழ் ஓரளவு பேசுவேன்.’

‘எனக்கு நாகர்கோயில்தான் சொந்த ஊர், சிறு வயதிலேயே சென்னையில் செட்டில் ஆகிவிட்டேன். நாகர்கோயில் ஆட்களுக்கு மலையாளம் ஓரளவு பேசத் தெரியும்.’

‘நைட் சாப்பிட என்ன வைத்திருக்கிறீர்கள் நான் பிரட் வைத்திருக்கிறேன் உங்களுக்கு வேண்டுமா? அங்கிள்’

‘இல்லை வேண்டாம். நான் சப்பாத்தி வைத்திருக்கிறேன். எனது மனைவி வெளியே எதுவும் சாப்பிட அனுமதிப்பது இல்லை.’

சாப்பிட்டு முடித்துவிட்டு உறங்குவதற்கு தயாரானோம். பெண்மணி இன்னும் பேசி முடித்தப் பாடில்லை. நான் குட்நைட் சொல்லிவிட்டு அப்பர் பெர்த்தில் ஏறி படுத்து விட்டேன். அந்த இளைஞனுக்கு மிடில் பெர்த். அந்த பெண்மணி எழுந்தால் தான் மிடில் பெர்த் படுக்கையைத் தயார் செய்ய முடியும். லைட்டை அணைக்கலாமா என்று எதிர் பெர்த் வயதானவர் கேட்ட பிறகு ஒரு வழியாக அந்தப் பெண்மணியும் செல்லில் பேசி முடித்து, படுக்கத் தயாரானாள்.

தூக்கத்தில் எனக்கு என் மகன் நினைப்பாகவே இருந்தது. அவன் பேசியது, ஓடியது, மிதி வண்டி ஓட்டியது எல்லாம். என் கண் முன்பாக வந்து வந்து சென்றது. கனவில் இரயிலில் வந்த இளைஞன் ’அப்பா’ அழைக்கும் போது முழிப்பு வந்ததது. திருநெல்வேலியில் ரயில் நின்று கொண்டிருந்தது. மெதுவாக இறங்கினேன். அந்த இளைஞனைக் காணவில்லை. அந்த பெண்மணி காலையிலேயே எழுந்திருந்து செல்பேசத் தொடங்கி விட்டாள். நான் போய் முகங்கழுவி பல் தேய்த்துக் கொண்டிருக்கும் போது ரயில் நகரத் தொடங்கியது. முகத்தைத் துடைத்து விட்டு இருக்கைக்கு வந்தேன். கையில் காபியோடு அவன் சிரித்துக் கொண்டே அவன் நின்று கொண்டிருந்தான்.

‘அங்கிள் இந்தாருங்கள் காபி’

‘உனக்கு’

‘நான் சாப்பிட்டு விட்டேன்’

இன்னும் 40 நிமிடத்தில் நாகர்கோயில் வந்துவிடும். மேலிருந்த பையை எடுத்து வைத்துக் கொண்டேன். அவன் சென்னையில் தனது கல்லூரி வாழ்க்கையைப் பற்றி நகைச்சுவையாக ஏதேதோ சொல்லிக்கொண்டு வந்தான். மனம் அதில் லயிக்கவில்லை. அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நாகர்கோயில் வந்தது. பையை எடுத்துக்கொண்டு ’ஸீ யூ கோபால், உன்னை சந்தித்தில் மகிழ்ச்சி’ என்று சொல்லிவிட்டு ரயிலை விட்டு இறங்கி நடந்தேன். யாரோ என் பின்னால் நெருக்கமாக வந்தார்கள். திரும்பி பார்த்தேன் கோபாலகிருஷ்ணன் என்ற கோபால்.

‘என்ன கோபால்? என்ன விஷயம் ரயில் இங்கு நிறைய நேரம் நிற்காது.’

‘இல்லை அங்கிள் ஒரு விஷயம்.’

‘என்ன?’

‘உங்களைப் பார்த்தால் ஐந்து வருடத்துக்கு முன் ஒரு சாலை விபத்தில் இறந்த என் அப்பாவைப் போலவே உள்ளது.. இதைச் சொல்ல வேண்டும் போலிருந்தது அதனால் தான் நான் உங்கள் பின்னால் வந்தேன். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. சரி அங்கிள் ரயில் கிளம்பப் போகிறது நான் வருகிறேன்.’

அதிர்ந்து போய் நின்றேன். உள்ளுணர்வு ஏதோ சொல்ல ‘உன் அப்பாவின் பெயர் என்ன?’ என்று போய்க்கொண்டிருந்தவனிடம் கேட்டேன்.

ரயிலில் ஏறியபடியே அவன் திரும்பிச் சொன்னான். ’ராகவன்’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக